முர்ஷிதாபாத் :பீகாரில் ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரு வரிசையில் கொண்டு வரும் பணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஈடுபட்டு உள்ளார்.
டெல்லி, மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், வரும் ஜூன் 12ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, இடது சாரிகள், பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம், டெல்லி ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்து இருந்தன. மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், பாட்னா எதிர்க்கட்சிகளின் மகா ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மம்தா பானர்ஜியின் அறிவிப்பை தொடர்ந்து மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்து உள்ளார்.