கொல்கத்தா:மம்தா பானர்ஜியின் அரசியல் செல்வாக்கை பலமாக உணர்த்தும் பவானிபூர் தொகுதியின் வாக்குப்பெட்டியின் சீல் இன்று உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
இதனுடன் சேர்த்து நடைபெற்ற ஜாங்கிபூர், சாம்சர்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
தேர்தல் அலுவலருக்கு மட்டுமே செல்போன் அனுமதி
காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு இடையே நடைபெற்றுவருகிறது. மேற்கண்ட மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் செப்டம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
வாக்கு எண்ணும் மையத்தில் இருபத்து நான்கு மத்தியப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் அந்தப் பகுதி முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் வைக்கப்பட்டது.
வாக்கு எண்ணும் அலுவலர்கள் பேனா, தாள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும், தேர்தல் அலுவலர், பார்வையாளர் செல்போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.
சம்சர்கஞ்சில் அதிகபட்சமாக சுமார் 80% வாக்குகள் பதிவு
கொல்கத்தாவின் சகாவத் நினைவுப் பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கை பவானிபூர் தொகுதிக்கு 21 சுற்றுகள், சம்சர்கஞ்சிற்கு 26 சுற்றுகள், ஜாங்கிபூர் தொகுதிக்கு 24 சுற்றுகள் என எண்ணப்பட்டுவருகின்றன.
மம்தா போட்டியிட்ட பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 57.09 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக முன்னதாக மேற்குவங்க மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதேபோல் சம்சர்கஞ்சில் 79.92 விழுக்காடு வாக்குகளும், ஜாங்கிபூரில் 77.63 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் கருத்துப்படி, மூன்று தொகுதிகளில் மொத்தம் ஆறு லட்சத்து 97 ஆயிரத்து 164 வாக்காளர்கள் உள்ளனர்.