கொல்கத்தா (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் நேற்று (நவ.10) இரவு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொல்கத்தாவிலிருந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் நோக்கி தேசிய நெடுஞ்சாலை 16இல் (NH 16) பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் திடீரென தீப்பற்றியுள்ளது. பேருந்தில் திடீரென தீ பரவியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் தப்பிப்பதற்காகப் பேருந்தில் இருந்து குதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத் துறையினர் பேருந்தில் பற்றி எரிந்த தீயை வெற்றிகரமாக அணைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறை தரப்பில், “பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. பேருந்தில் திடீரென தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் தீ பரவியதை அடுத்துத் தப்பிக்க முயன்று சாலையில் குதித்ததில் காயமடைந்தும், தீ காயங்களுடனும் 30 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் பேருந்தில் இருந்து குதித்து விபத்திலிருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இலங்கை அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை இடைநீக்கம் செய்தது ஐசிசி!