மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று (ஆகஸ்ட் 26) பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறி 36 வயதான நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஹவுராவில் உள்ள அவரது வீட்டிலிருந்து அந்த நபரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்ததாக தெரிகிறது. அவரிடம் இருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான நபர் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், ஹவுராவில் வசித்து வந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில், ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பின் ஏஜெண்ட்டுகள் பலர் மேற்குவங்க மாநிலத்தில் தங்கி இருப்பதாக மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், "மேற்குவங்கத்தில் பாகிஸ்தானை விரும்பும் அரசு உள்ளது.
அதனால்தான் நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக செயல்படுபவர்கள், குறிப்பாக ஐஎஸ்ஐ ஏஜெண்ட்டுகள் மேற்குவங்கத்தை தங்களது பாதுகாப்பான புகலிடமாகக் கருதுகிறார்கள். அதோடு, தங்களது தேச விரோதச் செயல்களைச் செய்ய இம்மாநிலத்தையே தளமாகப் பயன்படுத்துகிறார்கள். ஐஎஸ்ஐ ஏஜெண்ட்டுகளுக்கு மேற்குவங்க முதலமைச்சர் ஆதரவு அளித்து வருகிறார்" என்று குற்றம் சாட்டினார். பாஜக தலைவரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மம்தா பானர்ஜி தரப்பில் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.