பெங்களூரு:அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனத் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வரலாறு காணாத அளவில் பரவல் அதிகரித்து வருவதாகவும், மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கரோனா பாதித்தவர்கள் மற்றும் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் குறித்த உண்மைத் தகவல்களை வெளியிடாமல் ராணுவ ரகசியம் போல் சீனா காத்து உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
சீனாவில் பி.எப்.7 ஒமைக்ரான் மாறுபாடு கரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வரும் நிலையில், இந்தியாவில் குஜராத், ஒடிசா மாநிலங்களில் அந்த வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் தனி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையங்களில் வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பண்டிகைகளால் பரவல் விகிதம் அதிகரிக்காமல் இருக்க பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், உயிர் காக்கும் கருவிகள், உள்ளிட்ட மருந்துப் பொருட்களை போதிய அளவில் கையிருப்பு வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
பொது வெளியில் மக்கள் கரோனா தடுப்பு அம்சங்களை சரியாக கடைப்பிடிக்கின்றனரா என கண்காணிக்கவும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.