விழுப்புரம்:புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியைச்சேர்ந்தவர் ராஜாசுப்பிரமணியன். இவருடைய மகன் தீபமணி (வயது 30). ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தாய்லாந்துக்கு வேலைக்குச்சென்றுள்ளார்.
ஆனால், அங்கே படிப்புக்கு உரிய வேலை வழங்காமல் சட்டத்துக்குப் புறம்பான வேலைகளைக்கொடுத்துள்ளனர். அத்தோடு மின்யான்மர் நாட்டிற்கு தீபமணியை கடத்திச்சென்று சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து தீபமணி வீடியோ மூலமாக தனது பெற்றோருக்கு கண்ணீருடன் ஓர் காணொலிப் பதிவை அனுப்பி உள்ளார்.
அதில், தன்னுடன் ஏராளமான இளைஞர்கள் இங்கு கடத்தி வரப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாகவும், தன்னை மீட்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தீபமணியின் காணொலியைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர்கள் இதுகுறித்து புதுச்சேரி மாநில அரசை தொடர்புகொண்டு தனது மகனை மீட்டுதரும்படி கூறியுள்ளனர். மேலும், தீபமணியைப் போன்று 60-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பிணைக் கைதிகளாக மின்யான்மர் நாட்டில் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு எலக்ட்ரிக் சாக் கொடுத்து சித்ரவதை செய்யப்படுவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளதாகவும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.