கவுஹாத்தி: மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா தலைமையிலான மஹாவிகாஸ் அகாதி கூட்டணிக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கியுள்ளார். ஷிண்டே உள்பட 38 சிவசேனா எம்எல்ஏக்கள் ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். 38 சிவசேனா எம்எல்ஏக்கள் மற்றும் 9 சுயேச்சை எம்எல்ஏக்கள் கவுஹாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர்.
இதனிடையே கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தகுதி நீக்கம் தொடர்பாக ஜூலை 12ஆம் தேதி வரை சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.