டெல்லி:நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் உரையுடன் இன்று (ஜனவரி 31) தொடங்கியது. அப்போது மும்மு, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மக்கள் 2047ஆம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளில், கடந்த கால பெருமைகளையும், நவீன அத்தியாயங்களையும் உள்ளடக்கிய வளர்ந்த இந்தியாவை உருவாக்க மக்கள் முயற்சி செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால அரசாங்கத்தின் கீழ், நாடு பல நேர்மறையான மாற்றங்களைக் கண்டுள்ளது.
ஒவ்வொரு குடிமகனின் தன்னம்பிக்கையும் உச்சத்தில் இருப்பது மிகப்பெரிய மாற்றம். உலக நாடுகள் நமது நாட்டை பார்க்கும் விதம் மாறிவிட்டது. நமது பிரச்சினைகளைத் தீர்க்க மற்றவர்களைச் சார்ந்து இருந்த நிலை மாறி, உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.