கொல்கத்தா :மேற்கு வங்க மாநிலத்தில், பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜுலை) ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாநிலத்தில் உள்ள மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பில் உள்ள 73,887 இடங்களுக்கான உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்காக நடைபெறும் இந்தத் தேர்தலில் மொத்தம் 2.06 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சுமார் 5.67 கோடி மக்கள், இந்த தேர்தலில் வாக்கு அளிக்க தகுதி பெற்று உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகள், தங்கள் கட்சியின் பலம் மற்றும் பலவீனங்களை மதிப்பிடுவதற்கான வாய்ப்பாக இந்த தேர்தல் அமைந்து உள்ளதால், திரிணாமுல் காங்கிரஸ் அரசின் தொடர்ச்சியான ஆட்சியின் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தின் மனநிலையை விரிவாக கோடிட்டுக் காட்டுவதாக அமைந்து உள்ளது.
பஞ்சாயத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த ஜூன் 8ஆம் தேதி முதல், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களில், 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 22 மாவட்டங்களில் 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களும், 9,730 பஞ்சாயத்து சமிதி இடங்களுக்கும், டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் என 20 மாவட்டங்களில் உள்ள 928 ஜில்லா பரிஷத் இடங்கள் மற்றும் கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாகம் (GTA) மற்றும் சிலிகுரி துணைப் பிரிவு கவுன்சில் உள்ளிட்ட இடங்களுக்கு வாக்குப்பதிவு காலை 7 மணியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
இடைவிடாத மழைக்கு மத்தியில், காலை 6 மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஜில்லா பரிஷத்தில் உள்ள 928 இடங்களிலும், பஞ்சாயத்து சமிதிகளில் 9,419 இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 61,591 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா கட்சி 897 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 7,032 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 38,475 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 747 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 6,752 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், 35,411 கிராம பஞ்சாயத்து இடங்களிலும் போட்டியிடுகின்றது. காங்கிரஸ் கட்சி 644 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 2,197 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், 11,774 கிராம பஞ்சாயத்து இடங்களிலும் போட்டியிடுகின்றது. சுமார் 70,000 மாநில போலீஸாருடன் குறைந்தபட்சம் 600 கம்பெனி மத்தியப் படைகள் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.