அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. 2019ஆம் ஆண்டு கோயில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
கட்டுமானப் பணிகள் தொடங்கி ஓராண்டு தாண்டிய நிலையில், முதற்கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்தது. ராமர் கோயில் பிரம்மாண்ட முறையில் கட்டப்பட வேண்டும் என கோயிலின் அறக்கட்டளை அமைப்பான 'ராம்ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா' பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக நாடுகள் அனைத்திலிருந்தும் நீர் கொண்டுவரப்பட்டு, அவற்றை புதிய ராமர் கோயிலுக்கு சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 115 நாடுகளில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் பெற்றுக்கொண்டார்.