தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ட்விட்டரில் நிலவும் மாற்று கருத்துகள்! - சிதம்பரம்

டெல்லி: ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்த மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் மூத்தத் தலைவர் சிதம்பரம் விமர்சித்த நிலையில், மூத்தப் பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி அதற்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐநா
ஐநா

By

Published : Mar 24, 2021, 10:01 PM IST

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக்கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐநா மனித உரிமை மன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

அதில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளதைப் பல்வேறு தலைவர்கள் விமர்சித்தனர். இந்த விவகாரத்தில் தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கண்டனம் தெரிவித்திருந்தார்.

சிதம்பரத்தின் கருத்தை விமர்சித்துள்ள மூத்தப் பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி, "காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நிலையில், சிதம்பரம், ராகுல் காந்தி போன்ற மூத்தத் தலைவர்களே இப்படிப்பட்ட முரட்டுத்தனமான கருத்துகளைத் தெரிவிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்துவருகிறார். தற்போது, மத்திய முன்னாள்உள் துறை அமைச்சரே தமிழ் பேரினவாத கருத்துகளைக் கூறி எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றுகிறார்" எனப் பதிவிட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரபல இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா, "இந்து நாளிதழின் தலைவராக உள்ள ஒருவர் கருத்துருவாக்கம் செய்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

1) கடந்த பல மாதங்களாக இந்திய மண்ணில் சீனப் படைகள் இருந்துவருகின்றன.

2) 37 ஆண்டுகளாக, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள், தகவல்கள் ஆகியவற்றைச் சேகரிக்க வலியுறுத்தும் தீர்மானத்தை ஆதரிக்கச் சொல்வது தமிழ் பேரினவாதமா?" எனப் பதிவிட்டார்.

டி.எம். கிருஷ்ணாவின் கருத்துக்குப் பதிலடி அளித்த மாலினி, "விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து பத்தாண்டுகள் ஆன பிறகும், இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தீர்மானம் கோருவது என்பது அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதாகும். காஷ்மீர் போன்ற நமது உள்நாட்டு விவகாரத்தில் இதுபோன்று ஐநா தீர்மானத்தை நிறைவேற்றுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா?" எனப் பதிவிட்டார்.

மாலினியின் கருத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட கிருஷ்ணா, "2009ஆம் ஆண்டே, போர் முடிந்துவிட்டது. மனித உரிமை மீறல்களை விசாரிக்க கால வரம்பு ஏதும் இல்லை. அனைத்து நாடுகளும், உள்நாட்டு விவகாரம் எனச் சொல்ல தொடங்கினால், சர்வாதிகாரிகள் இதுபோன்றுதான் செய்வார்கள்.

காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த ஐநா மனித உரிமை ஆணையம் விரும்பினால், அதை நடத்தலாம்" எனப் பதிவிட்டார்.

இதற்கு மாலினி, "அது உங்கள் கருத்து, அதைச் சொல்ல உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. இம்மாதிரியான சவால் நிறைந்த காலத்தில் தெற்காசிய அண்டை நாடுகளை ஒன்றிணைப்பது கடினம் என நான் நினைக்கிறேன். பெருந்தொற்று மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு கருத்து தெரிவிப்பதைவிட சிறப்பான பணிகள் நிறைய இருக்கின்றன" எனப் பதிவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details