தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வல்லூறுகளுக்காக உணவகம் திறப்பு - அழிந்துவரும் பறவையினத்தைக் காக்க முயற்சி! - பஞ்சாப் வனத்துறை

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் அழிந்துவரும் பறவை இனமான வல்லூறுகளுக்காக உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான வல்லூறுகள் வந்து உணவு உண்கின்றன.

vulture
vulture

By

Published : Sep 13, 2022, 9:27 PM IST

பதான்கோட்: ஊன் உண்ணிகளான வல்லூறுகள், காடுகளின் துப்புரவாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன. வேட்டையாடுவதோடு, இறந்துபோன விலங்குகளின் இறைச்சிகளையும் உண்பதால், இவற்றிற்கு உணவுச் சங்கிலியில் முக்கியப் பங்கு உண்டு.

இந்தியாவில் வெள்ளை வல்லூறு, இந்திய வல்லூறு, சிகப்பு தலை வல்லூறு, எகிப்திய வல்லூறு உள்ளிட்ட 9 வகையான வல்லூறுகள் காணப்படுகின்றன. கடந்த 2003ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 40,000 வல்லூறுக்கள் இருந்தன.

2015ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 18,645ஆக குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது. கால்நடைகளுக்கு வழங்கப்படும் டைக்ளோஃபெனாக் என்ற மருந்தின் பயன்பாட்டால், அதிகளவு வல்லூறுக்கள் உயிரிழந்தாக தெரியவந்தது. இதையடுத்து 2006ஆம் ஆண்டு இந்தியாவில் கால்நடை சிகிச்சையில் டைக்ளோஃபெனாக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. வல்லூறுகள் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளன.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் வல்லூறுகளைப் பாதுகாக்கும் வகையில், வல்லூறு உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பதான்கோட் வனவிலங்குத் துறை அலுவலர்கள், வல்லூறுகளுக்கு உணவளிப்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இறைச்சியை பரிசோதிக்க தார் என்ற இடத்தில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறை அலுவலர்கள் இறைச்சிகளை பரிசோதித்த பிறகு, வல்லூறுகளுக்கு வழங்குகின்றனர். இந்த உணவகத்தில் ஏராளமான வல்லூறுகள் உணவு உண்கின்றன. பதான்கோட்டிலிருந்து மட்டுமல்லாமல், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் வல்லூறுக்கள் இந்த உணவகத்திற்கு வந்து உணவு உண்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப்புலிகள் இந்தியா கொண்டு வரப்படுகின்றன - பிரதமரின் பிறந்தநாளில் காடுகளில் விடத்திட்டம்

ABOUT THE AUTHOR

...view details