ஜெய்பூர்:ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி பகுதியில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் முன்னாள் தலைவரும், தூய்மை இந்தியா இயக்கத்தின் தூதுவருமான மறைந்த ராஜ்யோகினி தாதி ஜானகியின் நினைவு அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய வெங்கையா நாயுடு, "தன்னை கடவுளுக்கு அர்ப்பணித்து மனிதகுலத்திற்காகத் தன்னலமற்ற சேவைபுரிந்தவர் ராஜ்யோகினி தாதி ஜானகி. நாம் அனைவரும் தாதியின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற வேண்டும்.
அவர் தனது முழு வாழ்க்கையையும் பெண்கள் அதிகாரம், ஒற்றுமை, சகோதரத்துவம், சமூகத்தில் மனித விழுமியங்களுக்காக அர்ப்பணித்தார். அவர் போன்ற குணப்படுத்தும் குரல்கள் நாட்டிற்குத் தேவை" என்றார்.
தாதி ஜானகி போன்ற குணப்படுத்தும் குரல்கள் தேவை இந்த அஞ்சல் தலை நிகழ்ச்சியில், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிரம்ம குமாரிகள் நிறுவனத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுமார் 140 நாடுகளுக்கும் மேலாக பிரம்ம குமாரிகள் இயக்க சேவை மையங்களை நிறுவி, இந்தியத் தத்துவம், ராஜ யோகம் ஆகியவற்றைப் பரப்பிவந்த ராஜ்யோகினி தாதி ஜானகி, தனது 104 வயதில் வயது மூப்பின் காரணமாகக் காலமானார்.
அவர் தூய்மை மற்றும் பொது சுகாதாரத்தில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக, மத்திய அரசு தூய்மை இந்தியா இயக்கத்தின் தூதுவராக நியமித்தது. இவரது சேவையினைப் பாராட்டும்விதமாக இந்திய அரசு தற்போது அவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.