பெங்களூரு:கர்நாடகாவில் இன்று 109 தாலுக்காக்களில் உள்ள இரண்டாயிரத்து 709 பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது.
இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணி முதலே 20 ஆயிரத்து 728 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றுவருகிறது. பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே உள்ளது. இவை பிற்பகலில் மாற வாய்ப்புள்ளது என தேர்தல் ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தேர்தலில் காலியாக உள்ள 39 ஆயிரத்து,378 இடங்களுக்கு 1 லட்சத்து ஐந்தாயிரத்து, 431 வேட்பாளர்கள் போட்டியுள்ளனர். இவர்களில் மூன்றாயிரத்து, 697 வேட்பாளர்கள் முன்னதாகவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கரோனா அச்சுறுத்தல்களுக்கு நடுவே நடைபெற்றுவரும் இத்தேர்தலில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு ஒரு மணி நேரம் முன்பு வாக்களிக்குமாறு வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாக்களிக்க வரும் அனைவரும் முகக் கவசம், தகுந்த இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாகப் பின்பற்ற அங்கன்வாடி, ஆஷா மற்றும் மருத்துவப் பணியாளர்கள் வாக்குச் சாவடிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஒரே இடத்தில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் வாக்களர்களின் எண்ணிக்கை 1,500-லிருந்து 1000ஆக குறைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பிற்காக சுமார் 80 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'இடதுசாரி சித்தாந்தமே சரியானது'- ஆர்யா ராஜேந்திரன் சிறப்பு பேட்டி