டெல்லி:துணை குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (ஆக. 6) காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநராக பதவிவகித்து வந்த ஜகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், எதிர்கட்சியான காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவை நிறுத்தியுள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை இன்றே நடைபெற்று, உடனே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், நியமன எம்.பி., என நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க இயலும். இரு அவைகளின் உறுப்பினர்கள் மொத்தம் 788 பேர் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதனால், வெற்றியடைய 393 வாக்குகளை பெற வேண்டும்.
தற்போது, நியமன எம்.பி களாக பதவியேற்றுள்ள இளையராஜா, பி.டி. உஷா ஆகியோரும் முதல்முறையாக தனது வாக்கை செலுத்த உள்ளனர். தற்போது, துணை குடியரசு தலைவராக உள்ள வெங்கைய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆக. 10ஆம் தேதியுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்