அகர்தலா: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டன. முதற்கட்டமாக பிப்.16(வியாழன்) அன்று திரிபுரா மாநிலம் தேர்தலைச் சந்திக்கிறது. 60 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது.
பாஜக - ஜிஎப்ஃடி, சிபிஎம் - காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 28.13 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர். அதற்காக 3,328 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளது. இந்த தேர்தலில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 28 பேர் பெண்கள், 58 பேர் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றனர்.
காலை 7 மணிக்குத் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.