தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாக்காளர்களின் விவரங்கள் கசிவு: ஆதார் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு - Tamilndu Election 2021

hc
hc

By

Published : Apr 1, 2021, 12:46 PM IST

Updated : Apr 1, 2021, 1:31 PM IST

12:36 April 01

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் குறுஞ்செய்திகள் வந்துள்ளதால், புதுச்சேரி வாக்காளர்களின் விவரங்கள் எப்படி கசிந்தன என்பது குறித்து விசாரணை நடத்தி விளக்கமளிக்க ஆதார் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுவையில் பாஜக சார்பில் ஆதார் ஆணையத்திலிருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று, தொகுதி வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பித்து, அதன் வழியாகத் தேர்தல் பரப்புரை செய்துவருவதாகவும், சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழுவை அமைத்து அதனை  விசாரிக்க கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுவை தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி பாஜக சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி வாதிட்டார். மேலும் கட்சியினர் வீடு வீடாகச் சென்று மொபைல் எண்களைச் சேகரித்ததாகவும் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும், ஆணையத்தின் அனுமதி பெறாமல் குறுஞ்செய்தி மூலம் பரப்புரைசெய்வது தொடர்ந்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், வீடு வீடாகச் சென்று மொபைல் எண்களைச் சேகரித்ததாக பாஜக தரப்பில் கூறுவதை நம்ப முடியாது எனவும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் இந்தக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். மேலும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மார்ச் 29ஆம் தேதிவரை எஸ்.எம்.எஸ். மூலம் பரப்புரைசெய்த பாஜகவின் நடவடிக்கை தீவிரமான தனிமனித உரிமை மீறல் எனத் தெரிவித்தனர்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும் குறுஞ்செய்திகள் வந்துள்ளதால், வாக்காளர்களின் விவரங்கள் எப்படி கசிந்தன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆதார் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கட்சியினர் வீடு வீடாகச் சென்று விவரங்களைச் சேகரித்ததாகக் கூறிய பாஜகவின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் எப்படி கசிந்தது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆதார் ஆணையம், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டும் விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

Last Updated : Apr 1, 2021, 1:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details