ராய்ப்பூர்: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம், வருகிற 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக 3 ஆயிரம் விஐபிகள் உள்பட சுமார் 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் உள்பட சுமார் 15 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கில் பக்தர்களின் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்காக 45 சமூக உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு, தினமும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அனுப்பப்படுகிறது. ராஜஸ்தானில் இருந்து சுமார் 600 கிலோ நெய் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதே போன்று அந்தந்த மாநிலங்களில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், இந்தியாவின் அரிசியின் கிண்ணம் என அழைக்கப்படும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ரைஸ் மில்ஸ் சார்பில் சுமார் 3 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் சார்பில் காய்கறிகளும் ஜன.22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்திற்காக அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு சாய், “அனைவருக்கும் தெரியும், நாங்கள் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை நல்லாட்சி வாரத்தை கொண்டாடி வருகின்றோம். இதற்கான எங்களது லட்சியம் மற்றும் உறுதி ராம ராஜ்ஜியமாகும். அதற்காக ரைஸ் மில் அமைப்புகள் சார்பாக, சுமார் 3,000 டன் அரிசி சத்தீஸ்கரில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.