டெல்லி:பெண்களுக்கு எதிராக நடந்த உள்ளுறுப்பு வன்முறை என்பது அட்டூழியமே அன்றி வேறு இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது. கடந்த மே 2023 முதல் வாரத்தில் இருந்து நடைபெற்று வரும் மணிப்பூர் வன்முறையில் இரண்டு விசாரணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, இரண்டு மாதங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணைக் குழுக்கள்: -
மணிப்பூர் விவாகரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான குழுவில், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் டிஜிபியும் மற்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான தத்தாத்ரே பட்சல்கிகரும், மூன்று முன்னாள் உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி, யார் யாருக்கெல்லாம் நிவாரணம் பெறத்தகுதியுடையவர்கள் என்றும், என்னென்ன மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் அரசுக்கு பரிந்துரை செய்வர்.
மேலும், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியான குற்றப்பத்திரிகைகளில், மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அந்த அநீதிக்கு துணைபோன காவல் துறையினரை விசாரிக்குமாறு தத்தாத்ரே பட்சல்கிகரை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை -மணிப்பூர் கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற விசாரணையில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வெளியிட்டுள்ள உத்தரவில், மணிப்பூரில் வெடித்த வன்முறையில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் தொல்லைகள் என்பது மிகவும் வேதனைக்குரியது என்று தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அதிகாரிகள் விசாரணை நடத்த அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும் எனவும், மணிப்பூரி பெண்கள் தொடர்பான நிர்வாண காணொலி, மனித உரிமைகளை மீறும் செயல் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, பெண்களை பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளுக்கு உட்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அரசியல் சாசன விழுமியங்களான கண்ணியம், தனிமனித சுதந்திரம் மற்றும் சுயாட்சி ஆகிய அனைத்தும் மீறப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தனர்.
பட்சல்கிகர் ஐபிஎஸ் என்ன செய்வார்?பட்சல்கிகர் ஐபிஎஸ்ஸின் பணி என்பது மணிப்பூர் விவகாரத்தில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மணிப்பூரில் குறைந்தபட்சம், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பான 12 வழக்குகளில் சிபிஐ செய்யும் பணியை மேற்பார்வையிடுவார்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக, அம்மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட 6500 முதல் தகவல் அறிக்கைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட 42 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அவர் கண்காணிப்பார்.
மூன்று பெண் நீதிபதிகளின் பங்கு:உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள 36 பக்க உத்தரவில், மணிப்பூர் வன்முறையை விசாரிக்க மூன்று முன்னாள் உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு சேர்ந்து விசாரிக்கிறது. இக்குழுவானது பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி, நிவாரணமுகாம்களில் கண்ணியம் நிலைநாட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும். மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குதல் மற்றும் உளவியல் நல்வாழ்வை உறுதி செய்ய முயற்சிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை கண்டறிதலின் தேவை:வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நிவாரண நடவடிக்கைகளைப் பெற வேண்டும், அதேபோல், வன்முறைக்கான காரணகர்த்தாவை, எந்தவித சார்புநிலை இல்லாமல் அரசிற்குத் தெரியப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறுகிறது. மேலும், சில இடங்களில் கலவரக்காரர்களுடன் அரசு கூட்டு சேர்ந்துள்ளது எனும் குற்றச்சாட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிக்கான வாக்குறுதி:அரசியலமைப்பினை மீறி, இந்த வன்முறையில் குற்றவாளிகளுடன் சேர்ந்து குற்றவாளியாக மாறி இருக்கும் ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் இதற்கு முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும் எனவும், இதுவே நீதிமன்றத்திடம் இருந்து அரசியலமைப்புச் சட்டம் கோரும் நீதிக்கான வாக்குறுதி என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க:வன்முறைகள் நிறுத்தப்படுவதையும், சட்டத்தின்படி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்து, மக்களிடையே நம்பிக்கையினை மீட்டெடுக்க உறுதிசெய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிரேன் சிங் தலைமையிலான அரசின் புலனாய்வு அமைப்பின் மந்தமான விசாரணையின் வேகம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம் மற்றும் பலரை கைது செய்யாதது போன்ற காரணங்களை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. மேலும், இந்த வழக்கை அக்டோபர் 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.
இதன்மூலம் மணிப்பூர் விவகாரம் குறித்து விசாரிக்கும் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க 2 மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளது, உச்ச நீதிமன்றம்.
இதையும் படிங்க: பெண் வீட்டாரிடம் தன்னைப்பற்றி தவறாகக் கூறிய நபரை வெட்டிக்கொன்ற இளைஞர் - நெல்லையில் நடந்தது என்ன?