ஜோத்பூர்:கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு விர்ச்சுவல் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு பயணம் செல்ல முடியாததால், ஜூம் போன்ற ஆன்லைன் செயலிகள் மூலமாக திருமணங்கள் நடந்தன. இப்போது கொரோனா கட்டுப்பாடுகளை இல்லாத சூழலிலும், பல்வேறு காரணங்களால் விர்ச்சுவல் திருமணங்கள் நடக்கின்றன.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த முஜ்மல் கான் என்ற இளைஞருக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த உருஷ் பாத்திமா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் வீடியோ கான்பரன்சிங்கில் திருமணம் நடந்துள்ளது. முஜ்மல் கான் ஓட்டுநராக பணிபுரிகிறார். இரு வீட்டாரும் பொருளாதார வசதி இல்லாத சாதாரண குடும்பத்தினர் என்பதால், எளிமையான முறையில் வீடியோ கான்பரன்சிங்கில் திருமணத்தை நடத்தியுள்ளனர்.
திருமணம் முடிந்த பிறகு, மணமகளை புகுந்த வீட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், விசா கிடைப்பதில் சற்று தாமதமானதால், 138 நாட்களுக்குப் பிறகு மணமகள் இப்போது புகுந்த வீட்டிற்கு வந்துள்ளார். மணமகள் உருஷ் பாத்திமா நேற்று(மே.24) தனது கணவர் வீட்டை அடைந்துள்ளார். இதனால், குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். மணமகள் வருகையால் அவர்களது வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அனைவரும், முஜ்மல் கான் வீட்டிற்கு சென்று பாகிஸ்தானைச் சேர்ந்த மருமகளை ஆவலுடன் விசாரித்துச் செல்கின்றனர்.
இவர்களது திருமணத்தை வீடியோ கான்பரன்சிங்கில் நடத்த முஜ்மல் கானின் தாத்தா பால்ஹே கான் மெஹர் ஏற்பாடு செய்துள்ளார். காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றார்போல் பாரம்பரியத்தை மாற்றுவது அவசியம் என்று மெஹர் கூறுகிறார்.