புதுச்சேரி:இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தபடியாக நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாபடும் நிகழ்வு என்றால் அது விநாயகர் சதுர்த்திதான். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணி முதலே கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுது. அதன் பிறகு விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு விநாயகர் தரிசித்து வருகின்றனர். மேலும் தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.