ஸ்ரீஹரிகோட்டா:இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் மூலம் 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் இன்று (நவம்பர் 18) செலுத்தப்பட்டன. இந்த நிகழ்வில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய விண்வெளி திட்டத்தில் இது புதிய தொடக்கம். நாட்டின் ஆராய்ச்சி, மேம்பாடு, கல்வி மற்றும் தொழில்துறையின் ஒருங்கிணைப்பு காரணமாக விண்வெளித்துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது. விண்வெளித்துறையில் அரசு - தனியார் பங்களிப்புக்கு வழிவகுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இயக்கத்தில் இது ஒரு திருப்புமுனை.
இஸ்ரோவின் பெருமிதம் கொள்ளத்தக்க சாதனைகளில் மேலும் ஒன்றாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. இது இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாக்கியுள்ளது. குறைந்த செலவில் செயற்கைக்கோள் செலுத்துவதில் வரலாற்று சிறப்புமிக்க இன்றைய நிகழ்வு அனைத்து நிறுவனங்களுக்கும் சமவாய்ப்பை அளிக்க உதவுகிறது. விண்வெளித்துறையில் கடந்த 2 ஆண்டுகளில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய விண்வெளித்துறை அண்மைக்காலத்தில் தொலைதூர மருத்துவம், ரயில்வே, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கியமான துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை ஏற்கனவே ஏறுமுகத்தில் இருக்கின்றன. எனத் தெரிவித்தார்.