ராஜமகேந்திராவரம் (ஆந்திரா): திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், செப்டம்பர் 22ஆம் தேதி விஜயவாடாவிலுள்ள சிறப்பு நீதிமன்றம் சிஐடி விசாரணைக்காக இரண்டு நாட்கள் (செப் 23 மற்றும் செப் 24) காவலில் வைக்க உத்தரவிட்டது.
தற்போது மத்திய சிறையில் இரண்டு நாள் விசாரணை முடிந்துள்ளது. இதனையடுத்து, இன்று (செப்.24) காணொளிக் காட்சி மூலமாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடுவிற்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் சிஐடி அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவை விசாரணை செய்ய (செப் 23 மற்றும் செப் 24) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி, சந்திரபாபு நாயுடு அவருடைய வழக்கறிஞர் உடன் பேச 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது.
இன்று (செப்.24) இரண்டாம் நாள் விசாரணை முடிந்த பின்னர், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல் துறையினர் சிறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர் என சிறைத்துறை டிஐஐி எம்.ஆர்.ரவி கிரண் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி மாலை 5 மணிக்கு ப்ளூ ஜீன்ஸ் என்ற மொபைல் செயலி மூலமாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு காணொளிக் காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் எனவும், மேலும் ப்ளூ ஜீன்ஸ் என்பது கைதிகளை ஆன்லைன் உபயோகப்படுத்தி காணொளிக் காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பயன்படுத்தப்படும் மொபைல் செயலி எனவும் தெரிவித்தார்.