சண்டிகர்: புத்தாண்டு பிறந்ததையொட்டி பஞ்சாப் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு: பஞ்சாப் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஜீன்ஸ், டீசர்ட் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடு களப்பணிக்கு செல்வோருக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததால், லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர்களுக்கு உடை மற்றும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் வருகைப்பதிவு: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்கீழ் பணிபுரிபவர்களுக்கு டிஜிட்டல் வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய ஊரக வளர்ச்சித்துறையின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர்கள் செல்போன் ஆப் மற்றும் நேஷனல் மொபைல் மானிட்டரிங் சிஸ்டத்தில் பதிவு செய்வது கட்டாயம்.
அங்கன்வாடிகளுக்கு விடுமுறை: பஞ்சாப் மாநிலத்தில் கடும் குளிர் நிலவுவதால், வரும் 8ஆம் தேதி வரை அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. கடும் குளிரில் இருந்து சிறு குழந்தைகளைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிகளுக்கு ஜனவரி 9ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடுங்குளிர் காரணமாக டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் சிக்கிய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜினாமா