கேரள மாநிலம் பலாரிவட்டம் பகுதியில் கட்டப்பட்ட மேம்பால கட்டுமானத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிந்த விஜிலென்ஸ் காவல் துறையினர், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் வி.கே. இப்ராஹிம் குஞ்சுவுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. அந்த அழைப்பாணையில், கொச்சியில் உள்ள அலுவலகத்தில் நவ. 30ஆம் தேதியன்று முன்னிலையாகுமாறு தகவல் கூறப்பட்டுள்ளது.
பலாரிவட்டம் மேம்பால கட்டுமான ஊழல் தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வி.கே. இப்ராஹிம் குஞ்சுவுக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் மூவாட்டுப்புழா கையூட்டு ஒழிப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
மேம்பால கட்டுமான ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம்! இந்த மனுவானது, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், “உடல்நிலை சரியில்லாமல், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இப்ராஹிம் குஞ்சுவை மருத்துவமனையிலேயே வைத்து விஜிலென்ஸ் அலுவலர்கள் விசாரிக்கலாம். விசாரணை அலுவலர்கள் நான்கு நாள்கள் கோரிய நிலையில், அவரை ஒரு நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.
நவம்பர் 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அவர் விசாரிக்கப்படலாம். விசாரணை என்ற பெயரில் நீதித் துறை காவலில் இருக்கும் இப்ராஹிம் குஞ்சுவுக்கு, அலுவலர்கள் எந்தவிதமான (மனம் அல்லது உடல் ரீதியான) துன்புறுத்தல்களை அளிக்கக் கூடாது. இது தொடர்பான நீதிமன்ற உத்தரவை மருத்துவமனை நிர்வாகத்திடம், விசாரணை அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
இதையும் படிங்க :தங்கக் கடத்தல் வழக்கு: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சி.எம்.ரவீந்திரன்