டெல்லி: கொரிய நாட்டை சேர்ந்தவரிடமிருந்து டெல்லி போக்குவரத்து காவலர் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து, டெல்லியில் போக்குவரத்து காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து டெல்லி காவல்துறை, “இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், அந்த வீடியோவில் காணப்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது. டெல்லி காவல்துறை, எத்தகைய ஊழலையும் பொறுத்துக் கொள்ளாது” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த போக்குவரத்து காவலர் வெளிநாட்டவரிடமிருந்து ரூ.5000 வாங்கி விட்டு அதற்கு, ரசீது கூட கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்த இந்த சம்பவம் முழுவதையும் அந்த கொரிய நாட்டவர், தனது காரில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் படம்பிடித்து உள்ளார். 1.34 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட பிரபல யூடியூபரான அவர், தனது யூடியூப் சேனலில் டெல்லி அவருக்கு நேர்ந்த சம்பவம் மற்றும் அவரது இந்தியா பயணம் குறித்த வீடியோக்களை பதிவேற்றி உள்ளார்.
அந்த வீடியோவில், போக்குவரத்து காவலரை பார்த்து நலம் விசாரித்த கொரிய நாட்டவரை நிறுத்திய காவலர் “நீங்கள் தவறான வழியில் வந்து உள்ளதாக” கூறுகிறார். அதற்கு, அந்த வெளிநாட்டவரும், கூப்பிய கைகளுடன் மன்னிப்பு கேட்கிறார். அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துக் காவலர் வெளிநாட்டவரிடம், நீதிமன்ற அபராதமாக ரூ.5000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்.