சண்டிகர்:பஞ்சாபில் "வாரிஸ் பஞ்சாப் டி" என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங், சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்காக தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் அம்ரித் பால் சிங்கின் உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.
அப்போது, அம்ரித் பால் சிங் தனது உதவியாளரை விடுதலை செய்யக்கோரி கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஏந்தியபடி தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார். இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அம்ரித் பால் சிங்கின் உதவியாளரை போலீசார் விடுவித்தனர்.
பின்னர், அம்ரித் பால் சிங்கையும் அவரது கூட்டத்தையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த 19ஆம் தேதி அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்ய முயன்றபோது அவர்கள் தப்பியோடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் அம்ரித்பாலின் உறவினர் ஹர்ஜித் சிங், அவரது உதவியாளர்கள் தல்ஜித் சிங் கல்சி, பசந்த் சிங், குர்மீத் சிங் மற்றும் பகவந்த் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள அம்ரித் பால் சிங்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அம்ரித் பால் சிங்கை போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அம்ரித் பால் சிங் டர்பன் இல்லாமல், கூலிங் கிளாஸ், ஜாக்கெட் அணிந்து கொண்டு மாறுவேடத்தில் டெல்லியில் சுற்றித்திரிவது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அவர் நேபாளத்தில் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்தியத் தூதரகம் அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.