டெல்லி:தற்போது துணை குடியரசு தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடையும் நிலையில் , நாட்டின் அடுத்த துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
துணை குடியரசு தலைவர் தேர்தல் - தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜகதீப் தங்கார் தேர்வு! - பிரதமர் மோடி
ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ள துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் , பாஜக சார்பில் தங்களது துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் நட்டா , மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் , நிதின் கட்காரி மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக துணை குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜகதீப் தங்கார் தேர்வு செய்யப்பட்டார். இதனை பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். குடியரசு தலைவர் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.