ஜம்மு காஷ்மீர் ஹூரியத் மாநாட்டு கட்சித் தலைவர் சையத் அலி ஷா கிலானி நேற்று (செப்.1) இரவு 10.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 92.
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி 1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதியன்று வடக்கு காஷ்மீரின் சோபோரில் உள்ள சூரிமான்ஸ் கிராமத்தில் பிறந்தார். இவர் தனது இளமை பருவத்திலிருந்து ஜமாத்-இஸ்லாமி அமைப்புடன் இணைந்திருந்தார்.
காஷ்மீர் பிரிவினை கோரி தீவிரமாக செயல்பட்ட இயக்கங்களில் முக்கியமானது ஹூரியத் மாநாட்டு கட்சி. இந்தக் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர் சையது அலி ஷா கிலானி. இவர் கடந்த ஆண்டுதான் இக்கட்சியிலிருந்து விலகியிருந்தார்.
சுமார் 27 ஆண்டுகளாக இக்கட்சியில் செயல்பட்டுவந்த சையது அலி ஷா கிலானி, 1972, 1977, 1987 ஆகிய ஆண்டுகளில் காஷ்மீர் சோபூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இரங்கல்
சையது அலி ஷா கிலானியின் மறைவுக்கு காஷ்மீர் தலைவர்கள், பொதுமக்கள் பலரும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி தனது ட்விட்டரில், “கிலானியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. எங்களுக்குள் பல விஷயங்களில் உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் அவரது கடமை உணர்ச்சிக்காகவும், தன்னம்பிக்கைக்காகவும் அவரை நான் மதிக்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் ஹூரியத் தலைவர்களில் ஒருவரான சஜத் லோன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சையது அலி ஷா கிலானி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: நாட்டின் (G)as, (D)iesel, (P)etrol உயர்கிறது- ராகுல் காந்தி!