மும்பை:இந்தியாவில் 75 முதல் 90 வரையிலான காலகட்டத்தில் அகில இந்திய வானொலியில் ஒலித்த தமிழ் செய்திகளின் குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசாமி நேற்று (ஆகஸ்ட் 13) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது மகள் மற்றும் மகனின் குடும்பத்தாருடன் மும்பையில் வசித்து வந்தார்.
சரோஜ் நாராயணசாமி அகில இந்திய வானொலியின் செய்திச் சேவைப் பிரிவின் தமிழ்ச் செய்திப்பிரிவில் தமிழ் செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பிரிவின் செய்திப் பொறுப்பாளராக இருந்தார். அக்காலகட்டத்தில் ரேடியோவை ஆர்வத்துடன் கேட்பவர்கள் இவரின் குரல், தெளிவான பேச்சு ஆகியவற்றை அதிகம் விரும்பினார்கள்.
மேலும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளராக சரோஜ் பணியாற்றியுள்ளார். மும்பை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பட்டம் பெற்றார்.