டெல்லி: 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு திரைக் கலைஞர்களுக்குத் தேசிய விருதுகளை வழங்கினார். மேலும் இந்தியத் திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த வருடம் பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வஹிதா ரஹ்மான் செங்கல்பட்டில் பிறந்தவர். டாக்டர் ஆக வேண்டும் என லட்சியம் கொண்ட வஹிதா ரஹ்மான், குடும்பச் சூழல் காரணமாக நடிப்பில் ஈடுபட்டார். 1955ஆம் ஆண்டு ரோஜூலு மராயி படம் மூலம் தனது திரை பயணத்தைத் தொடங்கினார்.
தமிழ் சினிமாவில் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாலிவுட் கதவைத் திறக்க, சிஐடி என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். பாலிவுட் இயக்குநர் குரு தத் இயக்கத்தில் வஹிதா ரஹ்மான் இயக்கிய பியாஷா படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.