ஆலப்புழா:கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், வீடுகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆலப்புழா சேர்ந்த ஆகாஷ், ஐஸ்வர்யாவுக்கு இன்று (அக்.18) திங்களன்று திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.
இவர்கனின் திருமணம் தளவாடி பனையண்ணூர்காவு தேவி கோயிலில் நடைபெற இருந்தது. ஆனால் கனமழை காரணமாக கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
திருமண நடைபெறும் இடத்திற்கு செல்ல மணமக்கள், மற்றும் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து மணமக்களை பெரிய வெண்கல பாத்திரத்தில் ஏற்றி படகாக மாற்றி வெள்ளத்தில் அரை கிலோ மீட்டர் அழைத்து சென்று திருமணத்தை நடத்தி முடித்தனர்.
இதுகுறித்து ஆகாஷின் தாயார் ஓமனா கூறுகையில், "மணமக்களை பெரிய பாத்திரத்தில் ஏற்றி கொண்டு செல்ல முடிவு செய்தோம். இதையடுத்து திருமணம் குறித்த நேரத்தில் சுபமாக முடிந்தது" என்றார்.
ஆகாஷ் செங்கனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிகிறார். ஐஸ்வர்யா அதே மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். கரோனா பணியில் இருந்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்ட போதிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் திருமண நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு, எளிய முறையில் திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!