வாரணாசி :உத்தர பிரதேசத்தில் பவுன்சர்களை பணி அமர்த்தி வியாபாரி தக்காளி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பருவம் தவறுதல், வரத்துக் குறைவு, பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு கிலோ தக்காள் 250 ரூபாய் வரை விற்கப்படுவதால் நடுத்தர மக்கள் விழி பிதுங்கி காணப்படுகின்றனர். எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தக்காளி விலை உயர்ந்து உள்ளதால், அதை பதுக்கி கொள்ளை விலைக்கு விற்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.
தக்காளியின் மவுசு அதிகரித்து காணப்படும் நிலையில், சில இடங்களில் அதை திருடும் சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தின் கோனி சோமனஹள்ளி கிராமத்தில் பெண் விவசாயியின் இடத்தில் இருந்து 50 முதல் 60 தக்காளி மூட்டைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த ஜூலை 5 ஆம் தேதி திருடிச் சென்றதாக கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.