சாமராஜநகர்: வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டு 1993ஆம் ஆண்டு பாலாறு வனப்பகுதியில் குண்டு வெடிப்பை நடத்தினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 22 போலீசார் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் வீரப்பன் உள்ளிட்ட 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை வழங்கப்பட்ட வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரில் ஒருவர்தான் கர்நாடக மாநிலம் ஹனூரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஞானப்பிரகாசம், கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால், ஞானப்பிரகாசத்தின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஞானப்பிரகாசம் (69) சுமார் 29 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளார்.
மேலும் அவர் சிறையில் இருந்த காலகட்டத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் ஞானப்பிரகாசத்திற்கு, உச்ச நீதிமன்றம் டிசம்பர் 20, 2022ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து சாமராஜநகர் நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, ஞானப்பிரகாசம் மைசூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இதை அடுத்து, ஞானப்பிரகாசம் கர்நாடக மாநிலம் ஹனூர் தாலுகாவில் உள்ள சந்தனபால்யா என்ற கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஞானப்பிரகாசம், கடந்த சில நாட்களாகவே மிகுந்த அவதிக்கு உள்ளானார். இந்த நிலையில், நேற்று (டிச.15) புற்றுநோயின் காரணமாக ஞானப்பிரகாசம் காலமானார்.
மேலும் பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சைமன் அந்தோனியப்பா, பில்வேந்திரன் மற்றும் மீசை மாதையன் ஆகியோர் ஏற்கனவே மரணித்த நிலையில், 2004ஆம் ஆண்டில் நடந்த என்கவுண்டரில் வீரப்பனும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.