மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அமையவிருந்த மெகா வேதாந்தா ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் திட்டம் குஜராத்திற்கு மாற்றப்பட்டு வேதாந்தா – ஃபாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் அரசு கையெழுத்திட்டுள்ளது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் தொழில்கள் அதிநவீன குறைக்கடத்திகளைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், இந்தியாவில் தற்போது இந்த குறைக்கடத்திகளுக்கு பெரும் தட்டுப்பாடு உள்ளது. எனவே, குறைக்கடத்திகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட வேண்டும். இதற்காக மகாராஷ்டிர மாநிலம், புனே அருகே இந்தத் திட்டம் அமைக்கப்பட இருந்தது.
இதுதொடர்பாக அப்போதைய மகாராஷ்டிர அரசு பல கூட்டங்களை நடத்தியது. தைவானில் உள்ள ஃபாக்ஸ்கான் மற்றும் சுரங்கத்துறையில் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் இணைந்து மகாராஷ்டிராவில் குறைக்கடத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளன. இப்போது இந்தத்திட்டம் குஜராத்தில் செய்யப்பட உள்ளது.
சிவசேனா தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே, முந்தைய மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) அரசாங்கம் இந்தத்திட்டத்தை கிட்டத்தட்ட இறுதி செய்துள்ளது என்று கூறியிருந்தார். 1,54,000 கோடி முதலீடு செய்து வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் மூலம் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கக்கூடும். அவை இப்போது கைதவறிப்போய் உள்ளது எனக்குற்றம்சாட்டியுள்ளார்.