டெல்லி : எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. திருமாவளவன், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் சார்பில் தான் மணிப்பூருக்குச் சென்ற போது, நிவாரண முகாம்களில் உள்ள மெய்தி மற்றும் குக்கி இன மக்களை சந்தித்ததாகவும், அப்போது அவர்கள் மணிப்பூர் அரசு மட்டுமின்றி, மத்திய அரசின் மீதான நம்பிக்கையையும் தாங்கள் இழந்துவிட்டதாகத் தெரிவித்ததாகவும் திருமாவளவன் கூறினார்.
குக்கி தரப்பு மட்டுமின்றி மெய்தி என இருதரப்பிலும் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்; மணிப்பூர் முதலமைச்சர் தங்களை சந்தித்து ஆறுதல் கூட கூறிவில்லை என இரு தரப்பு மக்களும் வேதனைத் தெரிவித்ததாக திருமாவளவன் கூறினார். 90 நாட்களாக நடந்த கலவரச் சம்பவங்கள், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்ணின் மைந்தர்கள் சொந்த மண்ணிலே அகதிகளைப் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக திருமாவளவன் மக்களவையில் எடுத்துரைத்தார்.
90 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் மணிப்பூர் கலவரத்திற்குப் பிரதமர் மோடி ஒரு வரியில் இது கண்டிக்கத்தக்கது என்று கூறியதாகவும்; இந்த அரசின் மீதான நம்பிக்கையை நாட்டு மக்கள் இழந்துவிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். மணிப்பூர் மக்களைப் போலவே எதிர்க்கட்சிகளும் மத்திய அரசின் மீது நம்பிக்கை இழந்து இருப்பதாகக் கூறினார்.
கார்கில் போரில் கலந்து கொண்ட ராணுவ வீரர், மணிப்பூர் கலவரத்தில் மானபங்கப்படுத்தப்பட்ட தன் மனைவியைக் காப்பாற்ற முடியாமல் போனதாகக் கூறியது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார். சொந்த மண்ணிலேயே இந்த மண்ணின் மைந்தர்கள் அகதிகளாக வாழும் சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும்; பெண்களை நிர்வாணப்படுத்தி மிகக் கேவலமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் திருமாவளவன் குற்றச்சாட்டு தெரிவித்தார்.