புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் ஏழை மக்களிடம் பரிசோதனை மற்றும் மருத்துவத்திற்கு கட்டணம் வசூலிக்கும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மருத்துவமனை முன்பு நடைபெற்றது.
புதுச்சேரி மாநில அமைப்பாளர் தேவப்பொழியின் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜிப்மர் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக திருமாவளவன், "தமிழ்நாடு, புதுச்சேரி மக்களின் நம்பிக்கை பெற்ற மருத்துவமனையாக ஜிப்மர் இயங்கி வருகிறது. உயிர் காக்கும் பல்வேறு வகையான உயர் வகை மருத்துவங்கள் இங்கே வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் பல தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும் ஜிப்மர் மருத்துவமனையின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அப்படி சிறப்பு வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனைக்கு என்ன கேடு வந்தது என்று தெரியவில்லை இன்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ரத்த பரிசோதனை செய்தால் கூட இன்று ஜிப்ரில் பணம் கட்ட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. தனக்கான தேவைகளை தானே செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பது என்பது தவறானது. தற்போது மருத்துவமனை, ரயில் நிலையம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கங்கள் அதிகமாக உள்ளது.
இங்கு பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் தமிழ் தெரியவில்லை என்றால் வெட்கப்படுவதில்லை. ஆனால் நாம் இந்தி தெரியவில்லை என்று வெட்கப்படுகிறோம் இந்த நிலை மாற வேண்டும் என்றார். மொழி தெரியாத ஒரு மருத்துவரால் எப்படி ஒரு நோயாளியின் வலியை புரிந்து கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், வடமாநிலத்தவர்களால் மொழித் திணிப்பு, கலாச்சார திணிப்பு வெற்றிகரமாக மோடியால் நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், ஜிப்மர் நிர்வாகம் கட்டணத்தை மெல்ல மெல்ல வசூலித்து மருத்துவமனையை தனியார் மயமாக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை தூக்கி எறிய ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தேசிய அளவில் உள்ள கருத்தில் விடுதலை சிறுத்தைகளால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
இந்திய அரசியலில் எந்த கட்சியும் முன்னெடுக்காத ஒரு நிலைப்பாட்டை விடுதலை சிறுத்தைகள் முன்னெடுத்துள்ளதாகவும், அது தான் கட்சியில் 10% பெண்களுக்கு பொறுப்புகள் வழங்குவது என்று குறிப்பிட்ட அவர், இதை நாம் செயல்படுத்தினால் மிகப் பெரிய கட்சிகளில் கூட அவர்களுக்குள் ஒரு குளறுபடி ஏற்படும் என்று கூறினார்.
எனவே ஜிப்மர் மருத்துவமனையில் இருக்கின்ற பழைய நிலைமையே தொடர வேண்டும். கட்டணம் வசூலிப்பது என்ற ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படி இல்லை என்று ஜிப்மர் அடம் பிடித்தால் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மீண்டும் ஜிப்மருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்”. என்று கூறினார்.
இதையும் படிங்க:திமுகவினர் மீதான அண்ணாமலையின் புகார் - எந்த ஆதாரமும் இல்லை: நாராயணசாமி