டெல்லி: நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத் தொடரில் சந்திரயான்3 வெற்றி குறித்து விவாதித்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த டேனிஷ் அலிக்கு எம்பி (Danish Ali) எதிராக, பாஜக எம்பி ரமேஷ் பிதுரி பேசிய அவதூறு பேச்சுக்கு (derogatory statements) சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும், ரமேஷ் பிதுரி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, அவரது பேச்சினை அவைக் குறிப்பில் இருந்தும் நீக்கினார்.
ரமேஷ் பிதுரியின் அவதூறு பேச்சிற்கு பல்வேறு கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரமேஷ் பிதுரியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது ‘வெறுக்கத்தக்க பேச்சு’ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மக்களவை அமர்வின் போது ரமேஷ் பிதுரி கூறிய கருத்துக்கள், மக்களவையின் புனிதத்தை அப்பட்டமாக புறக்கணித்தது மட்டுமல்லாமல், நமது மதிப்பிற்குரிய அவையில் உள்ள சிறப்புரிமையை கடுமையாக மீறுவதாகவும் உள்ளது என திருமாவளவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.