வாரணாசி: லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலைய கழிவறையில் வியாழக்கிழமை (ஜூன் 01) ரூபாய் 1.12 கோடி மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தங்கத்தை யார் வைத்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்படி, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஐஎக்ஸ் 184' என்ற விமானம் வியாழக்கிழமை (ஜூன் 01) இரவு தாமதமாக விமான நிலையத்தை வந்தடைந்ததை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளது.
ஷார்ஜாவில் இருந்து வாரணாசி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் ஏராளமான தங்கத்துடன் பயணி ஒருவர் வந்துள்ளார். வழக்கமான சோதனை முடிந்ததும் பயணிகள் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து வழக்கம் போல கழிவறைகளை ஆய்வு செய்ததில், சிறுநீர் கழிப்பிடத்தின் அருகே பொருட்கள் உள்ளடக்கியது போன்ற சந்தேகம் படும்படியாக கருப்பு நிற பிளாஸ்டிக் பை ஒன்று பொட்டலமாக கிடந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பையை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதிலிருந்து 16 தங்க பிஸ்கட்டுகள் கிடைத்துள்ளது. இந்த தங்க பிஸ்கட்களை எடைபோட்டு பார்த்தபோது, 1866.100 கிராம் இருப்பது தெரியவந்துள்ளது மேலும் இதன் விலை சுமார் ரூபாய் 1.12 கோடி மதிக்கதக்கதாக இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தை கொண்டுவந்த நபரை அடையாளம் காண, தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.