டெல்லி:பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் இன்று (பிப். 4) காலமானார். அவருக்கு வயது 77. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி எனப் பதிவிட்டுள்ளார்.
பாடகி வாணி ஜெயராம் 1945ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்தார். 1971ஆம் ஆண்டில் வெளியான 'குட்டி' என்னும் இந்தி மொழி படத்தில் 'போலே ரே பப்பி ஹரா' என்ற பாடலைப் பாடி திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஓடியா, பெங்காலி உள்ளிட்ட 19 மொழிகளில் 10,000 பாடல்களுக்கும் மேல் பாடி உள்ளார்.
1974ஆம் ஆண்டு தமிழில் வெளியான தீர்க்கசுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும், சின்ன சின்ன ஆசைகள் படத்தில் மேகமே மேகமே, வைதேகி காத்திருந்தாள் படத்தில் இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ஆகிய பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள பாடல்களாகும். இவரது கலைப்பணியை பாராட்டி 2023ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 1980, 1991ஆம் ஆண்டுகளில் சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகளை பெற்றார்.
இதையும் படிங்க:'காற்றில் கலந்த கான சரஸ்வதி' வாணி ஜெயராம் குறித்த முழு விபரம்