ஆந்திரப் பிரதேசம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய இலவச டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இவை திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ள 9 மையங்களில் உள்ள 90 கவுண்டர்கள் மூலம் 10 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வீடு திரும்புவர். இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 23ம் தேதி அதிகாலை 1.45 மணிக்குச் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: தென்காசி காரிசாத்தான் கிராமத்தில் மூழ்கிய தரைப்பாலம்.. ஆபத்தான முறையில் கடக்கும் பொதுமக்கள்!
இதற்காக லட்சக்கணக்கான மக்கள் கோயிலுக்கு அலைமோதுவது வழக்கம். இந்நிலையில், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்தது. அவற்றைப் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில், இலவச தரிசனத்திற்கான 4,23,500 சர்வர்தர்ஷன் இலவச டோக்கன்கள் இந்த மாதம் 22ஆம் தேதி மதியம் 2 மணி முதல் அடுத்த 10 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. இவை திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ள 9 மையங்களில் உள்ள 90 கவுன்டர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.
தற்போது, குளிர்காலம் என்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக 22ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை என 10 நாட்களுக்கான டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்கப்பட உள்ளது. இருப்பினும் பக்தர்கள் தாங்கள் பெற்ற இலவச டிக்கெட்டுகளில் உள்ள தேதிக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக மட்டுமே திருமலைக்கு வர வேண்டும்.
எந்த வித டிக்கெட்டுகளும் இல்லாமல் வந்தால் சுவாமி, தரிசனத்திற்கான அறைகள் வழங்கப்படாது. அவ்வாறு வரும் பக்தர்கள் மொட்டையடித்துக் கொண்டும், வராக சுவாமி மற்றும் இதர சன்னதிகளுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். மேலும், ஏழுமலையான் கோயிலின் வெளியே இருந்து வழிபடலாம் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்ரீ ரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் ஏழாம் நாள் கொண்டாட்டம்..ஆண்டாள் கொண்டை அலங்காரத்துடன் அருள்பாலித்த ரெங்கநாதர்!