சம்பல்: உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் இஸ்லாம் நகர் சாலையில் தனியாருக்கு சொந்தமான குளிர்பதன கிடங்கு இயங்கி வருகிறது. நேற்று இந்த குளிர்பதன கிடங்கின் மேற்கூரை உடைந்து விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. விபத்து நிகழ்ந்த போது கிட்டங்கியில் 50க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படை மற்றும் காவல் துறையினர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பலர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்த கோர விபத்தில் சிக்கி 14 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்ததாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த குளிர்பதன கிடங்கு அத்தியாவச பொருட்களை சேமித்து வைக்கக் கூடிய கிட்டங்கி எனக் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குளிர்பதன கிடங்கில் உள்ள ரேக்குகளில் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், உருளைக்கிழங்கு மூடைகளை அடுக்கி வைத்ததாலே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக போலீசார் கூறினர்.
தொடர் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், படுகாயங்களுடனோ, சடலமாகவோ தொழிலாளர்கள் மீட்கப்படலாம் என மீட்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர். இதனிடையே குளிர்பதன கிடங்கின் உரிமையாளர்கள் அன்குர் அகர்வால், ரோகித் அகர்வால் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக பொருட்கள் சேமிக்கப்பட்டதை கண்காணிக்க தவறியதாக அப்பகுதி தோட்டக்கலை அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணைக் குழுவை அமைத்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.
இதனிடையே தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரிகளும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை கண்டுபிடித்து உயிருடன் மீட்க, மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத அறிவித்து உள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். 3 மாதங்களுக்கு முன்னரே கட்டப்பட்ட குளிர்பதன கிடங்கின் மேற்கூரை இடிந்து விழந்த விபத்து உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:டெல்லி மதுபான முறைகேடு வழக்கு - மணீஷ் சிசோடியா காவல் நீட்டிப்பு!