உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதை பணியில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டு, பணி நடந்த சுரங்கப்பாதையின் சில பகுதிகள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பணியாற்றிய 41 தொழிலாளர்களும், சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.
தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இன்றுடன் (நவ.25) விபத்து நிகழ்ந்து 14 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை மீட்புப் பணியில் பல்வேறு விதமான தடங்கல்கள் வந்த வண்ணமே உள்ளது. இருப்பினும், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருப்பது உறுதியாகியுள்ளது.
மீட்புப் பணிகள் ஒருபுறம் இருந்தாலும், சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு உயிர் வாழத் தேவையான ஆக்சிஜன், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவை 6 அங்குல பைப் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று வரை 41 தொழிலாளர்களை மீட்டு விடலாம் என அதிதீவிரமாக நடைபெற்று வந்த பணி தற்போது தோல்வியடைந்துள்ளதால், கையால் துளையிடாலாம் என வல்லுநர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதாவது செங்குத்தாக துளையிடும் பணிகள் நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியபோது, திடீரென ஆகர் எந்திரத்தின் பிளேடுகள் சேதமடைந்து பணியில் தாமதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பணியானது நடந்து விரைவில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என நம்பப்பட்டது.
ஆனால் தோண்டும் பணியின்போது விரிசல் ஏற்பட்டு, துளையிடும் பகுதியில் அதிர்வுகள் ஏற்படுவதால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மனிதர்களைக் கொண்டு கையால் தோண்டும் பணியை மேற்கொள்ளப் போவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீட்புப்பணி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, “கையால் துளையிடும் பணி விரைவில் துவங்கும், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள். அமெரிக்காவில் தயார் செய்யப்பட்ட ஆகர் இயந்திரம் மூலம் தோண்டும்போது ஒன்று அல்லது இரண்டு அடிக்கு ஒரு முறை தடங்கல் ஏற்பட்டால், அதனை அகற்றி மாற்ற வேண்டும்.
ஆனால் பணியில் ஒவ்வொரு முறையும் தடை ஏற்படுவதால், ஆகரை 50 மீட்டர் (இதுவரை பைப் பொருத்தப்பட்டுள்ள அளவு) பின்னோக்கி உருட்ட வேண்டும், அதனை பழுது பார்த்த பின் மீண்டும் 50 மீட்டர் தள்ள வேண்டும். இதற்கு 5 முதல் 7 மணி நேரம் வரை ஆகும். இதுவே மீட்புப்பணி தாமதமாக காரணம்" என தெரிவித்துள்ளார்.
தற்போது சுரங்கப்பணிக்காக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் என்ற நபர் வரவழைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகே மீட்புப் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்க கட்டுமானத் துறையில் உள்ளார்.
தற்போது சர்வதேச சுரங்க கூட்டமைப்பின் தலைவராகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு சுரங்கப்பாதை திட்டங்களுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார். தற்போது உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணியின் முக்கிய ஆலோசகராகவும் அர்னால்டு டிக்ஸ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மீட்புப்பணி குறித்து சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் கூறியதாவது, “தொழிலாளர்களை மீட்க இது ஒரு வழி மட்டுமல்ல, பல வழிகள் உள்ளது. இந்த நேரம் எல்லாம் நன்றாக உள்ளது. ஆகர் இயந்திரம் பழுதடைந்துவிட்டது. இனி அதை சரி செய்ய முடியாது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "அந்த மனசுதான் சார் கடவுள்".. சமூக வலைத்தளத்தில் உதவி கேட்ட நபருக்கு உதவிய ஜி.வி பிரகாஷ்.. குவியும் பாராட்டுகள்!