டேராடூன் (உத்தரகாண்ட்):நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், உத்தரகாண்ட மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதாவது, உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி தேசிய நெடுங்சாலையில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை, நேற்று எதிர்பாராத விதமாக இடிந்து விபத்துக்குள்ளானது. மேலும், அந்த சுரங்கப்பாதை விபத்தில் முதற்கட்டமாக சுமார் 36 தொழிலாளர்கள் வரை சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் உள்ள மணல் மற்றும் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று, மீட்புப் பணி குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியானது.
மேலும், சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்தவுடன், மாநில பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் மணிகாந்த் மிஸ்ரா, உடனடியாக ஆய்வாளர் ஐகதம்பா விஜல்வான் தலைமையிலான மீட்புக் குழுவினரைத் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து, மாநில பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
தற்போது இந்த மீட்புப் பணியானது 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுரங்கப்பாதையில் தற்போது வரை 15 மீட்டருக்கு மேல் கடந்துள்ளதாகவும், இன்னும் 35 மீட்டர் தூரத்தை அடைந்தால் தொழிலாளர்களை மீட்டு விடலாம் எனவும் கூறப்படுகிறது. நேற்று வரை சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வந்த நிலையில், தற்போது இடர்பாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் தொடர்பு கொள்ள முடிந்துள்ளது.