டேராடூன் (உத்தரகாண்ட்): உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம், யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதை, நேற்று (நவ.11) இடிந்து விழுந்துள்ளது. சுரங்கப்பாதை கட்டுமான விபத்தில் பணியிலிருந்த 36 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உத்தரகாண்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இன்று (நவ.12) கூறும்போது, "உத்தரகாசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து, அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறேன்.
மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுரங்கப்பாதையின் உள்ளே சிக்கியுள்ளவர்கள் பாதுகாப்பாகத் திரும்ப இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் இருந்த மணல் மற்றும் பாறைகளை அகற்றும் புகைப்படம் மற்றும் வீடியோவை மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) வெளியிட்டு இருந்தனர்.
உத்தரகாசி காவல் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி கூறும்போது, "உத்தரகாண்ட் மாநிலத்தின், உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாராவையும் - தண்டல்கானையும் இணைக்கும் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின்போது. ஒரு பகுதி சனிக்கிழமை (நவ.11) இடிந்து விழுந்தது.
இந்த கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் ஹைட்ரோ எலக்ட்ரிசிட்டி இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டெவலப்மென்ட் கம்பெனி தெரிவித்ததன்படி, சுமார் 36 நபர்கள் சுரங்கப்பாதையில் சிக்கி இருப்பதற்கு வாய்ப்புள்ளது. மேலும், 36 நபர்களை பத்திரமாக மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கட்டுமானம் இடிந்த இடத்தில் மண் மற்றும் பாறைகள் அகற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
சுரங்கப்பாதை கட்டுமானம் இடிந்த இடத்தில் காவல்துறையினர், வருவாய்த் துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின்போது இடிந்துள்ளது என்ற தகவல் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு வந்தவுடன், மாநில பேரிடர் மீட்பு படையின் கமாண்டர் மணிகாந்த் மிஸ்ரா, உடனடியாக ஆய்வாளர் ஐகதம்பா விஜல்வான் தலைமையிலான மீட்புக் குழுவினரைத் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஹரியானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய தீ - அடுத்து நடந்தது என்ன?