உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளும் பாஜக அமைச்சர் ஹரக் சிங் ராவத் அமைச்சரவையிலிருந்தும், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 14ஆம் தேதி அம்மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக இவர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டுவதாக கூறப்பட்டுவந்த நிலையில், இவர் மீது முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
வரும் தேர்தலில் ஹரக் சிங் தன்னுடன் சேர்த்து தனது மருமகளுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் பாஜகவோ குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.