உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் உள்ள புரோலாவில் நேற்று (ஜூன் 15) மத அமைப்புகள் கூட்டிய மகாபஞ்சாயத்துக்கு தடை கோரிய பொதுநல வழக்கை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் விசாரித்தது. சிவில் உரிமைகள் பாதுகாப்பிற்கான சங்கத்தின் உறுப்பினரான வழக்கறிஞர் ஷாருக் ஆலம், உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 'விபின் சங்கி' தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்றைய முன்தினம் 'மகாபஞ்சாயத்தை' தடை செய்ய ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
இதற்கு முன்பு வழக்கறிஞர் ஷாருக் ஆலம் உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன்பு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்க மறுத்து, மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணைக்கு உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சங்கி ஒப்புதல் அளித்து, உயர் நீதிமன்ற பதிவேட்டில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு, தலைமை நீதிபதி விபின் சங்கி (Vipin Sanghi) மற்றும் நீதிபதி ராகேஷ் தப்லி (Rakesh Tabli) ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரனைக்கு வந்தது.
அப்போது, புரோலாவைச் சேர்ந்த சிறுமியை இரண்டு இளைஞர்கள் துன்புறுத்தியதை அடுத்து, புரோலாவில் வகுப்புவாத பதற்றம் நிலவுவதாக ஷாருக் ஆலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும், மகாபஞ்சாயத்தில் மத அமைப்புகளின் தலைவர்களால் வெறுக்கத்தக்க பேச்சு வெளியிடப்படும் என்றும், இது சூழ்நிலையை மோசமாக்கும் என்றும் அவர் கூறினார்.