டேராடூன் : உத்தரகண்ட் பூகம்ப எச்சரிக்கை செயலியை அம்மாநிலத்தின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி புதன்கிழமை (ஜூலை 4) அறிமுகப்படுத்தினார்.
அப்போது, “இந்தச் செயலி பூகம்பத்திற்கு முன் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்திகளை அனுப்பும். மேலும் இது நிலநடுக்கத்தின் போது சிக்கியவர்களின் இருப்பிடத்தை கண்டறியவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எச்சரிக்கையை அனுப்பவும் உதவும்” என்றார்.
மேலும், “உத்தரகாண்ட் பூகம்பத்தால் பாதிக்கப்படும் மாநிலமாகும், எனவே இந்த பயன்பாடு நிலநடுக்கத்தின் போது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உதவும்” என்றும் கூறினார்.
உத்தரகண்டில் நிலநடுக்க செயலி அறிமுகம்! இந்தச் செயலி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் திரையிடவுள்ளன.
செயலியானது அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். செயலியை மாநில பேரிடர் ஆணையம் ஐஐடியுடன் இணைந்து தயாரித்துள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக உத்தரகண்டில் பூகம்ப எச்சரிக்கை செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!