டேராடூன் (உத்தராகண்ட்):உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நான்கு புனித தலங்களுக்கு செல்லும் 'சார்தாம் யாத்திரை' கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இதுவரை, எட்டரை லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். யாத்திரையின்போது உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுவரை 62 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். நேற்று வரை 57ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 62ஆக அதிகரித்துள்ளது. இதில், கேதார்நாத்தில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்தாம் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
யமுனோத்ரி - 17
கங்கோத்ரி - 4
கேதார்நாத் - 30
பத்ரிநாத் - 11 அதிகபட்சமாக கேதார்நாத்தில் 30 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் ஷைலஜா பட் இன்று(மே 23) கூறுகையில், "66% இறப்புகள் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக நிகழ்ந்துள்ளது. உடல் நிலை சரியில்லாத பக்தர்கள் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பயண வழிகளில் பக்தர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேதார்நாத் கோயிலுக்குப் பயணம் செய்யும்போது பக்தர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். செங்குத்தான மலையில் ஏறும்போது கவனமாக செல்ல வேண்டும். மலையின் உச்சிக்கு செல்லும்போது ஆக்ஸிஜன் பிரச்னை ஏற்படுகிறது.
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பக்தர்கள் தங்களது மருந்துகளை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். போர்வைகள், தகுந்த ஆடைகள் என முழு ஏற்பாடுகளுடன் செல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'சார்தாம் யாத்திரை' பக்தர்கள் கவலை: கேதார்நாத்தில் பனிப்பொழிவு, மழை!