உத்தரபிரதேசம்: அவுரியா மாவட்டம் நவீன் பஸ்தி பகுதியில் வசித்து வருபவர் பிரபால் பிரதாப் சிங். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று (நவ. 8) இவரது இளைய மகள் அஞ்சலி (20) தண்ணீர் சூடாக்க வைத்திருந்த ஹீட்டரின் கம்பியைத் தவறுதலாகத் தொட்டதால் அவர் மீது மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.
பின், பிதுனாவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட அஞ்சலியைப் பரிசோதித்த இரண்டு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அஞ்சலி இறந்த செய்தியைக் கேட்டு அவர் சகோதரர் மனம் உடைந்து கதறி அழுதுள்ளார். மேலும், அஞ்சலியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலனஸை அழைத்த போது, அவுரியா பகுதிக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அஞ்சலியின் சகோதரி மற்றும் சகோதரர், அஞ்சலியின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து துப்பட்டாவால் கட்டியுள்ளனர். சுகாதார மையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் யாரும் அவர்களுக்கு உதவவில்லை என்பதால் மனமுடைந்த அஞ்சலியின் சகோதரர் மற்றும் சகோதரி உடற்கூராய்வு செய்யாமல் அஞ்சலியின் உடலை தங்களது இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஷிஷிர் குமார் வர்மா கூறுகையில், பிதுனாவில் அமைந்துள்ள சுகாதார மையத்தின் கண்காணிப்பாளர் டாக்டர். அவிச்சல் பாண்டே மற்றும் அங்கு நியமிக்கப்பட்ட டாக்டர். கிரிபரம் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.